கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.மலர்விழி தலைமையில் 32வது தேசிய பாதுகாப்பு பேரணியைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் பேசிய விஜயபாஸ்கர், “தலைக்கவசம் உயிர்க்கவசம்; சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும். அலங்காரம் முக்கியமல்ல, உயிர்தான் முக்கியம் என்பதைப் பெண்கள் உணர்ந்து தலைக்கவசம் அணிவது அவசியம்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி தாந்தோணிமலை, சுங்ககேட், திருமாநிலையூர், லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, பேருந்து நிலையம் வழியாக சென்று, திருவள்ளுவர் மைதானத்தை அடைந்தது. இந்தப் பேரணியில் அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்துகொண்டு புல்லட் இருசக்கர வாகனத்தை அவரே ஊர் முழுக்க ஓட்டி வந்தார். அவருடன் சேர்ந்து கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மகளிர் போலீசார், சுய உதவிக்குழு பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் வாகனம் ஓட்டினார்கள்.
“தேர்தல் நெருங்க நெருங்க கரூரைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள் ஒட்டுகிறார், குதிரை வண்டி ஒட்டுகிறார், பைக் ஓட்டுகிறார், கிளி ஜோஸியமும் பார்க்கிறார்” என சுவராசியமாகப் பேசுகிறார்கள் கரூர் ர.ர.க்கள்.