சாலை விபத்தில் பசுமாட்டை இழந்து பரிதவித்த மூதாட்டிக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பெயரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதிய கறவை மாடு வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் பிரியம் பட்டியைச் சேர்ந்த வெள்ளைத்தாய், ஒரு பசுவை வளர்த்து அதன்மூலம் பிழைப்பை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேடசந்தூர் சத்திரப்பட்டி பகுதியில் உள்ள நான்கு வழி சாலை ஓரத்தில் அந்த பசுமாட்டை வெள்ளத்தாயி மேயவிட்டு கொண்டிருந்தபோது திண்டுக்கல் சென்ற லாரி, அந்த பசு மாடு மீது மோதியதில் அதே இடத்தில் பசுமாடு இறந்தது.
வாழ்வாதாரமான ஒரு கறவை மாட்டை இழந்த வெள்ளத்தாய் சம்பவ இடத்திலே அழுது புலம்பினார் இந்த விஷயம் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவே உடனே வெள்ளைத்தாயை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அதன்பின் கால்நடைத்துறை சார்பில் பசுமாடு வழங்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தான் நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெள்ளை தாயிக்கு பசுமாட்டை வழங்கினார் அதைக்கண்டு வெள்ளத்தாய் பூரித்துப் போய் அமைச்சர் சீனிவாசனுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். இதில் மண்டல இணை இயக்குனர் முருகன், உதவி இயக்குனர்கள் ஆறுமுக ராஜ், அப்துல் காதர், டாக்டர்கள் ராஜேஷ் பாலச்சந்திரன் உள்பட சில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.