Skip to main content

“வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” - அமைச்சர் சேகர் பாபு!

Published on 05/10/2024 | Edited on 05/10/2024
Minister Shekhar Babu says The construction of Vallalar International Center will be started soon

அருட்பிரகாச வள்ளலார் கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். இவர் சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தார். மேலும் பசியால் வாடுவோர் உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையில் தரும சாலையையும் தொடங்கினார். தரும சாலையில் அணையா அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை, எளிய ஆதரவற்றோருக்கும்  வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த 202ஆவது அவதார தின விழா(வருவிக்கவுற்ற நாள்) வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் இன்று நடைபெற்றது. காலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சத்திய தரும சாலையில் சன்மார்க்க கொடியை ஏற்றினர். இதனைத் தொடர்ந்து சத்திய தர்மசாலையில் அன்னதானம் வழங்கினர். இதில் வள்ளலார் குறித்த நூல் வெளியிடப்பட்டது. இது போல வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

Minister Shekhar Babu says The construction of Vallalar International Center will be started soon

மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) சுகுமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன்,கடலூர் இணை ஆணையர் பரணிதரன், மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், குறிஞ்சிப்பாடி பேரூர் செயலாளர் ஜெய்சங்கர், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சங்க மாநில தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழா ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், தெய்வ நிலைய அறங்காவலர் குழு தலைவர் அழகானந்தன், அறங்காவலர்கள் கனகலட்சுமி, கனகசபை, ஸ்ரீராமலு, கிஷோர் ஆகியோர்கள் செய்திருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, “வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வாழும் வள்ளலாராக உள்ள தமிழக முதல்வர், வள்ளலாரின் 200வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடி வள்ளலாருக்கு பெருமை சேர்த்தவர். அதற்காக ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கினார். திமுக தேர்தல் அறிக்கையில் வடலூரில்  வள்ளலார் வாழ்ந்த இடத்தில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்த தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அத்திட்டத்தைச் செயல்படுத்தினார். அதற்கு சில இடையூறுகள் ஏற்பட்டன, அந்த இடையூறுகள் முடிந்து மீண்டும் பணி தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

சார்ந்த செய்திகள்