ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காசிபாளையம், குருமந்தூர், கோசணம், அஞ்சானூர், ஆண்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், அரசின் நலத் திட்டப் பணிகள், கன்று வளா்ப்பு கடனுதவி, மகளிர் சுய உதவிக் குழுகள் கடனுதவி என ரூ.6.19 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 28 -ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாடத்திட்டம் குறைப்பது குறித்து அரசு ஏற்கனவே நிபுணர் குழு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்ட பிறகு, அடுத்த சில தினங்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதற்கு ஏற்ப கல்வித் தொலைக்காட்சியிலும் ஆன்லைன் மூலமும் பாடங்கள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும். தற்போது இருக்கும் சூழ்நிலையில், அரையாண்டுப் பரீட்சை நடைபெறாது. கடந்த காலத்தில், 'ஜாக்டோ ஜியோ' போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து இப்போது கருத்துக் கூற இயலாது.
புதிய கல்விக் கொள்கை குறித்து நிபுணர் குழு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளரிடமிருந்து கருத்துக்களை அரசு திரட்டி வருகிறது. மத்திய அரசு 2023 முதல் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல, விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ஏற்கனவே அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அக்குழு அனைத்துத் தரப்பு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். அக்குழுவின் அறிக்கை விரைவில் வேளாண் துறை அமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்படும். புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு சிறப்பாகச் செய்துள்ளது என்று அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டியுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயராக இருந்துள்ளார். அவரது தந்தை முதல்வராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் என்ன நடந்தது என்பது அவருக்கே தெரியும். எனவே, அவரது குற்றச்சாட்டில் நியாயம் இல்லை. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் என்ன இடம் பெறும் என்று கூற இப்போது இயலாது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வைத்திருப்பதால், அதனுடைய வாக்கு வங்கி எவ்வளவு உயரம் என்பது தேர்தல் சமயத்தில்தான் தெரியும். அது மக்களின் கையில் உள்ளது” என்று கூறினார்.