வேலூர் தொகுதி - கே.வி.குப்பம் காமாட்சியம்மன் கோவில் பேட்டை பகுதியில் நெசவாளர்களோடு கலந்துரையாடிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அந்த ஏரியாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
“சாதாரண ஏழை மக்களின் கஷ்டங்களை, நாடித்துடிப்புகளை அறிந்து, அரசுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எடப்பாடியார். விவசாயத்துக்கு அடுத்த படியாக குறைந்த முதலீட்டில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக கைத்தறி நெசவுத் தொழில் இருந்து வருகிறது. கைத்தறி நெசவுத்தொழில் குடிசைத் தொழிலாக தங்கள் வாழ்விடத்தில் இருந்தே குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படுகிறது. குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளை சேர்ந்த பலர் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். குடியாத்தம் பகுதிகளில் மட்டும் 30 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் தனியார் மூலம் சுமார் 4 ஆயிரம் நெசவாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெசவுத் தொழிலை செய்து வருகிறார்கள். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதில் அதிமுக அரசு பெரும் பங்காற்றி வருகிறது. கைத்தறி மற்றும் துணித் தொழிலின் வளர்ச்சிக்கு தமிழக அரசு முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறது. உற்பத்தி திறனை அதிகரித்து, வடிவமைப்பில் புதுமைகளைப் புகுத்தி, நெசவாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் பல நலத்திட்டங்களை கொண்டு சேர்த்து நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ்கிறது. அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உங்களுக்காக ஓடோடி உழைக்கக்கூடியவர்..
அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி. திமுக குண்டர்கள் நிறைந்த கட்சி. அதிமுக மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறது. அதிமுக அரசின் திட்டங்களை திமுக வழக்குப்போட்டு தடுத்து நிறுத்துகிறது. திமுகவிற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். கலர் கலராக சட்டை அணிந்து ஸ்டாலின் போடும் நாடகம் வேலூர் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் எடுபடாது. திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்தடை இருந்தது. மின்வெட்டு காலத்தில் கடும் தொழில் பாதிப்பு ஏற்பட்டது. நெசவாளர்கள் வேலையிழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டதை இன்றும் மறக்க மாட்டார்கள். மின்வெட்டை சரி செய்து இன்று மின்மிகை மாநிலமாக தமிழகத்தை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. 100 யூனிட் வரை இலவசமாக எடப்பாடிஅரசு வழங்கி வருகிறது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர் யார் என்று வாக்காளர்களாகிய நீங்களே யோசித்துப் பாருங்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளராக அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்ளார்.
திமுகவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது பேரன் உதயாநிதி ஸ்டாலின், மருமகன் தயாநிதி, மகள் கனிமொழி இப்படி அவர்களது குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் உயர்பதவியில் இருக்க முடியும். ஆசியாவில் ஏழாவது பணக்கார குடும்பமாக ஸ்டாலின் குடும்பம் உள்ளது. தமிழகத்தில் முதல் பணக்கார குடும்பமாக ஸ்டாலின் குடும்பம் உள்ளது. கல்குவாரி, சேட்டிலைட் சேனல்கள், திரைப்படம் என அனைத்தையும் ஸ்டாலின் குடும்பம் ஆக்கிரமித்துள்ளது. கோடம்பாக்கம் முழுவதும், பிள்ளையார் கோவிலை தவிர அனைத்து வீடுகளையும் விலைக்கு வாங்கி விட்டனர். 120 பேர் கொண்ட ஸ்டாலின் குடும்பத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.
அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டர் கூட சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும் இந்த கிராமத்தில் உள்ள சாதாரண ஒரு இளைஞன் கூட எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ வர முடியும். தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் ஒரு சாதாரண விவசாய வீட்டுப்பிள்ளை. இன்று அவர் தமிழக முதல்வராக பதவி வகிக்கிறார். இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சி மட்டுமே நல்லது செய்ய முடியும். வேலூர் தொகுதி மக்கள் என்றும் அதிமுகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று வழக்கம்போல் அதிரடியாகப் பேசினார்.