புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டமாக ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காமல் தாமதமான நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி 6 ஆம் தேதிக்கு (இன்று) மாற்றப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டனர். அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சரியான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினால் என்றைக்கு வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் எனக் கூறப்பட்டதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் தற்காலிகமாகவே ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கை ஒழுங்காக ஏற்பாடு செய்யாமல் சிறு தவறு நடந்தால் கூட, அது பின் வரும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளையும் பாதிக்கும். விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிய பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.