கடலூர் அருகேயுள்ள எம்.புதூர் கிராமத்தில் மோகன்ராஜ் என்பவர் நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடம் (கொட்டகை) வைத்துள்ளார். கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் வெடிக்க பயன்படுத்தும் நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் நேற்று 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 5 பேர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 5 பேரும் சிக்கியுள்ளனர். வெடித்து சிதறிய வெடிவிபத்தில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அம்பிகா(50) மற்றும் பெரிய காரைக்காடு கிராமத்தை சேர்ந்த சித்ரா(35) என்ற 2 பெண்களும் சி.என்.பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (34) என்ற ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வசந்தா மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உடல் முழுவதும் வெடி காயங்கள் ஏற்பட்டு வசந்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் நாட்டு வெடி தயாரிப்பு உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிசைத் தொழிலாக நடைபெற்று வந்த வெடி தயாரிப்பில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் சிதறி பலியான சம்பவம் சுற்றுவட்டார கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மாவட்டத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு தொடராமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நடைபெற்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளவும், வெடி தயாரிக்க உரிமம் பெறப்பட்டுள்ளதா, பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா, மின்கசிவால் விபத்து நடந்ததா என ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர், “இச்சம்பவம் அறிந்த முதல்வர் உயிர் இழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்க்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கி இருக்கிறார். காயமடைந்தவர்களுக்கு முதல்தர சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், “மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதையடுத்து அனைத்து வெடி தயாரிக்கும் பகுதிகளையும், பாதுகாப்புத் தன்மை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.