சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகளை அமைத்திருப்பதாகவும் இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லூப் சாலையில் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து லூப் சாலையில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 7வது நாளாகத் தொடர்ந்து வரும் இந்தப் போராட்டத்திற்கு விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளது.
இந்த நிலையில் சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லூப் சாலையில் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, “மீனவர்களின் கோரிக்கையை முதல்வர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று பேசினார்.
இதற்கு விளக்கமளித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், “நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும், மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார்.