இந்தியா முழுவதும் நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என்னை ஜெயிக்க வைத்தால் மக்களுக்கு இதை செய்வேன், அதை செய்வேன் என்று ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்தார்கள். தொகுதி மக்களும் வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஜெயிக்க வைப்பார்கள். ஆனால் ஜெயித்த வேட்பாளர்களோ ஜெயிக்க வைத்த மக்களை மறந்து விடுவார்கள். ஆனால் பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாரிவேந்தர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார்.
திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரிவேந்தர்… எம்.பி. தேர்தலின் போது பிரச்சாரத்தில் இலவச கல்வி உள்பட 3 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்திருந்தேன். அதன் படி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், முசிறி, துறையூர், குளித்தலை, மண்ணச்சநல்லூர், லால்குடி, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தலா 50 ஏழை மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் இலவச கல்வி அளிக்கப்படும்.
இதற்காக திமுக,கம்யூ, மதிமுக, விசிகே உள்ளிட்ட தோழமை கட்சிகள் நிர்வாகிகள் கொண்டு தேர்வு குழு அமைக்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தங்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தி எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம், எஸ்.ஆர்.எம்.நகர், பொத்தேரி, காஞ்சிபுரம் மாவட்டம் - 03 என்கிற அலுவலக முகவரியிலோ, நேரிலோ அல்லது இணைதளத்திலோ பதிவு செய்து கொள்ளலாம்.
இதே போன்று சட்டசபை தொதிக்கு 50 பேர் வீதம் 6 தொகுதிக்கு 300 பேருக்கு எஸ்.ஆர்.எம். குழுமத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முசிறி, பெரம்பலூர் உள்ளிட்ட 3 இடங்களில் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்றார். டெல்லி பாராளுமன்ற சென்ற பின்பு முதலில் விசயங்களை தெரிந்துகொண்டு அதன்பிறகு தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஐ.ஜே.கே. திருச்சி மாவட்ட தலைவர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.