திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பங்கேற்று பள்ளி மாணவ மாணவியர் 600 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் பல்வேறு புதிய உபகரணங்களுடன் தொடங்கப்பட்டுள்ள ஆய்வகத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, "தமிழகத்தில் 6,000 ரேஷன் கடை பணியாளர்களை நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் தேர்வுகள் அடிப்படையிலும், பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில்தான் அநேக கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் வரும் ஐந்து ஆண்டுகளில் 300 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் என்ற திட்டத்தில், முதல் ஆண்டிலேயே 75 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படத் தொடங்கி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்” என்றார்.
விழாவில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமன், முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.