
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பேரூராட்சி 4வது வார்டு பாலசுப்பிரமணியன் தெருவில் உள்ள காலனி பகுதிக்கு சென்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காலனி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்களுக்கு குடியிருக்க வீடு வசதி வேண்டுமென பொதுமக்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “14வருடங்களுக்கு முன்பு கலைஞர் ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக பதவியில் இருந்தபோது நீங்கள் வசிக்கும் காலனி அருகே உள்ள இடத்தை விலைக்கு வாங்கி உங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க முயற்சித்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் விரைவில் உங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் பேரூராட்சிகளில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள் அவர்கள் நிம்மதியாக இருக்க பாதுகாப்பான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” என்று கூறினார்.

அதை தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது என கூறி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அதற்கான உத்தரவுகளை வழங்க வேண்டுகோள் விடுத்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் குலவையிட்டு தங்களுடை மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதோடு பிரபல பேப்பர் ஏஜெண்ட் அழகர்சாமி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதன்பின்னர் அந்த பகுதி மக்கள் தங்களுடைய மயானத்திற்கு மின் இணைப்பு மற்றும் காம்பவுன்ட் சுவர் வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்தபோது உடனடியாக திமுக நிர்வாகிகளிடம் அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதில் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி. ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார் நத்தம் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திமுக நிர்வாகி அம்பை ரவி, ஒன் றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், சின்னாளபட்டி பேரூ ராட்சிமன்ற தலைவர் பிரதீபா, துணைத்தலைவர் ஆனந்தி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.