Skip to main content

சிமெண்ட் விலை உயர்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Minister Gold South Statement on Controlling Rise in Cement Prices!

 

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அதன் விலை உயர்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (23/10/2021) அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தனியார் சிமெண்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் மாதம் முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு அரசின் கவனத்திற்கு வந்தவுடன் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், தொழில்துறை அமைச்சர், சிமெண்ட் விலையைக் குறைப்பது தொடர்பாக தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் 14/06/2021 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அக்கூட்டத்தில், தொழில்துறை, சிமெண்ட் விலை உயர்ந்துள்ளதனால் கட்டுமான தொழிலுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படக்கூடிய இன்னல்களை குறிப்பிட்டு, சிமெண்ட் விலையைக் குறைக்குமாறு தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்களுடைய சிமெண்ட் சில்லரை விற்பனை விலையினை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைத்து, 15/06/2021 அன்று முதல் விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, சிமெண்ட் விலையானது 420 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. 

 

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால், கடந்த 06/10/2021 அன்று சிமெண்ட்டின் விலையானது 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், சிமெண்ட்டின் விலையானது குறைக்கப்பட்டு, தற்பொழுது 440 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சிமெண்ட்டின் விலையானது மார்ச் மாத விலையான ரூபாய் 420-ஐ ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து தற்சமயம் 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது 4.7 சதவீதம் ஆகும். எனவே, சிமெண்ட்டின் இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது. தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை  எடுத்து வருகின்றது. 

 

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 3,67,677 மெ.டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68,233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது, டான்செம் சிமெண்ட் 350 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தனியார் சிமெண்ட்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 சதவீதம் ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், டான்செம் விற்பனையினை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

மேலும், ஓரிரு வாரங்களில், தமிழ்நாடு அரசின் டான்செம் நிறுவனம் 'வலிமை' என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் 'அரசு' சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன், குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் 'வலிமை' சிமெண்ட் முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்-ன் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்