தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், பெண் தொழில் முனைவோருக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவர் பச்சைமால் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அந்த மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “ சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துவருகிறது. குறிப்பாக வாழையில் இருந்து மாவு தயாரிக்கும் பயிற்சி அளித்து அதை சந்தைப்படுத்துவது சிறப்பான செயல். எங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளேன்.
தமிழகத்தில் 9 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டது. அவர்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவதோடு, பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் 45 குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரி படிப்பை தொடரும் போது மாதம் ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கல்லூரி படிப்பில் இருந்து தற்போது 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் அரசு துறைகள் மற்றும் பெண் தொழில் முனைவோரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அதைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் திடீரென ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். திடீரென அமைச்சர் ஆட்சியர் அலுவலகத்திற்கு விசிட் அடித்து ஆய்வு கூட்டம் நடத்தியது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.