Skip to main content

''இந்த 5 டோல் கேட்டுகளும் வேண்டாம்... என் சொந்த ஊருக்கு நானே அந்த வழியாகத்தான் போகவேண்டும்''- எ.வ. வேலு பேட்டி

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

minister E.W. Velu interview after meet central minister

 

நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசிய நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''புறநகர் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது நகராட்சி சம்பந்தப்பட்டவர்களோ, மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்களோ டோல் கேட்டை தாண்டி நகர பகுதிகளுக்கு உள்ளே வர வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே தினமும் லோக்கலில் இருப்பவர்களே டோல் கேட்டில் கட்டணம் கட்டவேண்டும் என்பதில் சில சங்கடங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக கோரிக்கை மனுக்களையும் கொடுக்கின்றனர். இது சம்பந்தமாக ஏற்கனவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கடிதம் கொடுத்திருந்தேன்.

 

இந்த 5 டோல் கேட்டுகளும் மக்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பரனூர் டோல் கேட், சென்னசமுத்திரம், வானகரம், சூரபட்டு, நெமிலி இப்படி இந்த ஐந்து டோல் கேட்டுகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறேன். நமது மாநிலத்தில் மத்திய அரசின் சாலை பணிகள் மிக குறைந்த அளவே நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல பணிகள் தாமதமாகவே நடக்கிறது. ஆனால் ஒப்பந்ததாரர்களைக் கேட்டால் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். இப்பொழுது இருக்கும் மாநில அரசு அல்ல, முன்பு இருந்த மாநில அரசு. எனவே நான் அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே முதல்வர் எங்களைக் கூப்பிட்டு சொன்ன வார்த்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொடுங்கள் என்றார். திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி சாலை பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் கிட்டத்தட்ட 11 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. என் சொந்த ஊர் திருவண்ணாமலைக்கு நானே அந்த வழியாகத்தான் போகவேண்டும். அதையும் சுட்டிக்காட்டினேன். தமிழ்நாட்டில் சாலையை விரைவாக போட ஒப்பந்ததாரர்களிடம் சொல்லுங்க என்று கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்