வேலூரில் உள்ள அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி சுமார் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 8 தளங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலூரில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி அண்மையில் கும்பகோணம் வந்த பொழுது தமிழக அரசு தரமாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்ற முடியும். அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய அரசு பராமரிப்பு பணிக்காக சுங்க கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறுகின்றனர். வரும் 30 ஆம் தேதி மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும் அழைத்து நெடுஞ்சாலைகள் சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த கூட்டத்தில் தமிழக முதல்வரின் அனுமதியோடு நானும் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளோம் . அப்பொழுது தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் சாலைப் பணிகளுக்கான திட்டங்களுக்குக் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கும் எடுத்துரைப்போம்.
தமிழ்நாட்டில் 70 ரயில்வே பாலங்களுக்கு டெண்டர் விடப்பட்டு நில எடுப்பு பணிகள் இல்லாமல் இருந்த நிலையில், தமிழக அரசு நில எடுப்பு பணிக்காக 5 மாவட்ட வருவாய் அதிகாரிகள் குழு அமைத்து நிலங்களை எடுத்து தற்போது 30 பாலங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாலங்கள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த மழையின் போது தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி ஊட்டி ஆகிய இடங்களில் மழையால் பாலங்கள் பாதைகளும் சேதமடைந்துள்ளது. இதனை மாநில அரசு நிதியில் சரி செய்கிறோம். மத்திய நிதி அமைச்சரை அழைத்துச் சென்று காட்டியும் நிதி வழங்கவில்லை. எத்தனை முறை தான் கேட்பது. மத்திய அரசை குறை சொல்லும் நோக்கில் சொல்லவில்லை. அவர்கள் எதையும் செய்யவில்லை. இதற்காக ரூ.750 கோடி செலவு செய்துள்ளோம். மாநிலத்தில் பலபாலங்களை வேகமாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்காக எளிதாக முறையில் திறந்து வருகிறோம்” என்றார்.
அண்மையில் திறக்கப்பட்ட அரசு குடியிருப்பு மேற்கூரை கீழே இடிந்து விழுந்தது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், திருப்பத்தூர் மாவட்டம் மின்னூரில் இலங்கை முகாம் வீட்டின் உரிமையாளர்களே இடித்து அழகுபடுத்தும் பணி செய்ததால் பாதிப்பு ஏற்பட்டது” எனக் கூறினார் .