அமைச்சர் செல்லூர்.ராஜுக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கடும் கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அதிமுக அமைச்சரே துவங்கி வைப்பதா என தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களான தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்.கருணாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
மதுரையில் எதிர்வரும் 8.10.17 அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜ் தொடங்கி வைப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜ் இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு பலமுறை காவல்துறை அனுமதி மறுத்தது. அப்போது நீதிமன்றத்திற்கு சென்று, நீதிபதிகள் பல நிபந்தனைகளை விதித்தப் பிறகே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு அனுமதி கிடைத்தது.
இந்நிலையில் அம்மா வழியில் ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர் எடப்படியார் ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் இன்றி அனுமதி வழங்கி இருப்பதும், அமைச்சர் செல்லூர்.ராஜ் தொடங்கி வைப்பதும், அதிமுகவின் கொள்கைகளுக்கும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., சமூகநீதிக்காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா ஆகியோருக்கும் செய்யும் துரோகமாகும்.
தமிழ்நாடு அமைதிப் பூங்கா என பெயர் பெற்ற பூமி. இங்கே சாதி, மத வேற்றுமைகளை தாண்டி, தமிழர்கள் சமூக நீதியால் இணைக்கப்பட்டு அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த அமைதியிலும், ஒற்றுமையிலும் மண் அள்ளிப் போடவேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
முதல்வர் எடப்பாடியார், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜ் தொடங்கி வைப்பதை தடுக்க முயற்சி எடுக்குமாறும், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தினால் சமூக அமைதி கெடாமல் இருக்க சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.