தமிழகத்தின் தென்காசி பகுதியிலிருந்து அதிகமான கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாகத் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் தொடர்ந்து கனிம வளங்கள் கொள்ளை அடித்துக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் அந்தப் பகுதியில் வருகின்ற அனைத்து வாகனங்களும் வரிசையாக சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. இதனால் பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகளைக் காண முடிந்தது. கனரக வாகனத்தின் எடை சீட்டுகளை சரிபார்க்கும் பணியில் சோதனைச் சாவடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.