தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4,67,000 பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக்கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருந்ததை, மனுதாரர் சூரியபிரகாசம் சுட்டிக்காட்டினார்.
அவரது வாதத்தை மறுத்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் பிரபாவதி, தமிழகத்தில் 5.66 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 58,509 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்களில், 4.60 லட்சம் தொழிலாளர்களுக்கு, மே மாதம் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 4.67 லட்சம் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ஆனால், இவை அனைத்தும் காகிதத்திலேயே இருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, தமிழக அரசு மீது மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கவுன்சிலிங் மையங்கள் அமைப்பது குறித்தும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.