Skip to main content

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி நீண்டகால சிறைவாசிகளுக்கு கருணை காட்டுங்கள்! திருமாவளவன் வேண்டுகோள்

Published on 02/01/2018 | Edited on 02/01/2018

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி நீண்டகால சிறைவாசிகளுக்கு 
கருணை காட்டுங்கள்! திருமாவளவன் வேண்டுகோள்




தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள வேண்டுகோள்!

’’மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டையொட்டித்  தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு மேல் சிறைகளில் உள்ள தண்டனைக்  கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தமிழக முதலமைச்சர் கூறியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.  அத்துடன், குறிப்பிட்ட சில வழக்குகளைச் சார்ந்த தண்டனைக் கைதிகளை மட்டுமின்றி, நீண்டகாலமாகச் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய கருணைகாட்டுமாறு  முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய அளவில் உள்ள சிறைவாசிகளின் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது முஸ்லிம்களும் தலித்துகளும் தான் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.  2015ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள தண்டனை சிறைவாசிகளில் 17 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் நீண்டநாட்களாக சிறையில் இருப்பவர்களை புத்தாண்டிலும், தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின் அடிப்படையில் தணடனைக் குறைப்பு செய்து விடுவித்து வந்தனர். கடந்த 2006,2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின்போது அவ்வாறு   ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.

2006 ஆம் ஆண்டு அரசாணை எண் G.O.Ms.No.873, Home Department, dated 14.09.2006 அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O .Ms.No.1326, Home Department, dated 12.9.2007  அடிப்படையில் 5 பெண் கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் G.O.Ms.No.1155, Home Department, dated 11.09.2008  அடிப்படையில் 1406 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.

2011இல் ஆட்சி மாற்றம் நடைபெற்று அதிமுக அரசு பதவியேற்றபின் தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசு கைதிகளை விடுவிக்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். ஒரு அரசின் பெருமை சட்டத்தைப் பயன்படுத்தி தண்டிப்பதில் மட்டும் இல்லை, அது கருணையை வெளிப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. 

எனவே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இதர வழக்கில் உள்ள இஸ்லாமியர்களையும் இத்தருணத்தில் விடுதலைச் செய்ய பரிவுக்காட்டுமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.’’

சார்ந்த செய்திகள்