விவசாயத்துக்கான இலவச மின் மோட்டார்களுக்கு மீட்டர் பொருத்துவதை கண்டித்து போராட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுயில் பெரியவடவாடி, எறுமனூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக மின் வாரிய பணியாளர்கள் இலவச மின்சாரம் பயன்படுத்தும் விவசாய மின் இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணிகளை கடந்த சில நாட்களாக செய்து வருகின்றனர். இதனால் இலவச மின்சாரம் ரத்தாகும் என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விருத்தாசலம், பூதாமூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மின் மோட்டார் பொருத்துவதை கண்டித்தும், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் செயற்பொறியாளர் சரவண் துரை மோகன் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். அதேசமயம் இலவச மின்சாரம் ரத்து செய்ய முற்பட்டால் அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
-சுந்தரபாண்டியன்