விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே வராக நதி ஓடுகிறது. நதியின் குறுக்கே சிவவலபுறை என்ற ஊரின் அருகே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, அந்தத் தடுப்பணை நிரம்பி உபரிநீர் அணையைக் கடந்து செல்கிறது.
இந்த அணை மூலம் சேமிக்கப்படும் தண்ணீர், அருகிலுள்ள கிராமப் புறங்களில் விவசாய பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டு விவசாயிகள் அதன் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தத் தடுப்பணையில் ஏற்கனவே முதலைகள் உள்ளதாக எச்சரிக்கை பலகையை அதிகாரிகள் வைத்துள்ளனர். அதனால் இப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிலர், இப்பகுதியில் மது குடிப்பதற்காக வந்தவர்கள் அங்கிருந்து எச்சரிக்கை பலகையை நாசம் செய்துவிட்டனர்.
இதனால் எச்சரிக்கை பலகை இல்லாததால் தடுப்பணையில் முதலை வாழ்வது தெரியாததாலும் இப்பகுதிக்குப் புதிதாக வரும் வெளியூர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்தத் தடுப்பு அணையில் இறங்கி குளித்து மகிழ்கிறார்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது போல உணவுப் பண்டங்களை எடுத்து வந்து இங்கே வந்து அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பொழுதைக் கழித்துவிட்டுச் செல்கிறார்கள்.
எனவே, சுற்றுலா வருபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தடுப்பணையில் யாரும் குளிக்கக் கூடாது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து வீராணம் ஏரி வழியாக தண்ணீர் வரும் வாய்க்கால் பகுதிகளில் சர்வ சாதாரணமாக வாழும் முதலைகள், மனிதர்களையும் ஆடு மாடுகளையும் கடித்துக் குதறும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.