நெல்லை மாவட்டத்தையே திகிலும் பதற்றத்திலும் தள்ளியிருக்கிறது அந்த மெகா கொள்ளை.
நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரில் அலி ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடை வைத்திருப்பவர்கள் மைதீன் பிச்சையும் (வயது 55), அவரது சகோதரர் அலியாரும் 20 ஆண்டுகளாக மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (11/04/2022) இரவு சுமார் 08.30 மணியளவில் நகைக்கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு நகைப்பையுடன் டூவீலரில் வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார் மைதீன் பிச்சை. இவரை வேவு பார்த்த கும்பல் ஒன்று டூவீலரில் மைதீன்பிச்சையைப் பின்தொடர்ந்து சென்று திடீரென அரிவாளால் அவரை வெட்டியது. இதனால் மைதீன் பிச்சை நிலைகுலைந்து சரிந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த நகைப்பையைப் பறித்துச் சென்றுள்ளனர்.
மெயின் வீதியில் நடந்த இந்தச் சம்பவத்தையறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மைதீன் பிச்சையை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.
அவரிடம் விசாரித்த போலீசாரிடம் அரை மயக்கத்திலிருந்த மைதீன் பிச்சை நகைப்பையில் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 75 ஆயிரம் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அலர்ட் ஆன போலீசார் மாவட்டம் முழுக்க உள்ள சோதனை சாவடிகளை உஷார்படுத்தியதுடன் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
கொள்ளை போனது 5 கிலோ தங்க நகைகள் என்பதால், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் எஸ்.பி. சரவணன், ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கடை மற்றும் பிற பகுதிகளை ஆய்வு செய்தனர்.
வழியோர சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் டூவீலரில் ஒருவன் மைதீன் பிச்சையை பின்தொடர்ந்து வந்ததும் மற்ற மூன்று பேர் மைதீன் பிச்சையைத் தாக்கி நகைப்பையைப் பறிக்கப் பதுங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் அடிப்படையில் கொள்ளைக்கும்பலைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை அமைத்திருக்கிறார் எஸ்.பி. சரவணன்.
ரொக்கம், 5 கிலோ நகை கொள்ளை போனதின் மொத்த மதிப்பு 2.51 கோடி என்கிறார்கள். தினமும் நகைக் கடையைப் பூட்டிவிட்டு நகைப் பையுடன் வீடு திரும்பும் மைதீன் பிச்சையை வேவுப் பார்த்து திட்டமிட்டு கொள்ளையை நடத்தியிருக்கிறது கும்பல் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். மேலும் அண்மையில் அவரது கடைக்கு வந்து போனவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர் தனிப்படையினர்.
இந்த மெகா நகை கொள்ளை சம்பவம் மாவட்டத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது.