மே முதல் நாளில் நடக்க வேண்டிய கிராமசபைக் கூட்டம் மக்களவைத் தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்ததால் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக் கிழமை அனைத்து ஊராட்சிகளிலும் நடந்தது. இதில் கிராம மக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் பற்றிய விவாதங்களுக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல், சேந்தன்குடி, கொத்தமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் திருவரங்குளம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள சுமார் 30 கிராமங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் மனுக்களாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது.. ஹைட்ரோ கார்ப்பன் வேண்டாம் என்று 2017 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறோம். ஆனால் கிராம சபை தீர்மானங்கள் இருக்கும் நிலையில் காவிரி பாசனப் பகுதியில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருவது வேதனை அளிக்கிறது. அதனால் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றனர்.