Skip to main content

ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க காக்க வைக்கப்பட்ட ஸ்டாலின்!

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க காக்க வைக்கப்பட்ட ஸ்டாலின்!

ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்க மு.க.ஸ்டாலினை காக்க வைத்து பின்னர் அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் திமுகவினர் முறையிட்டனர். 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின்,

இன்று தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். இந்த விழாவில் ஆளுநருக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்குப் பிறகு ஆளுங்கட்சி கொறடா ராஜேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.

முறைப்படி அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்தான் வாழ்த்து தெரிவிக்கவேண்டும். ஆனால், நான் வாழ்த்து தெரிவிக்க மேடையை நெருங்கும்போது அதிகாரி ஒருவர் நீதிபதிகள் வாழ்த்தியபின்புதான் உங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என அறிவித்தார். அப்படியென்றால், நீதிபதிகளுக்கு பின்புதான் அமைச்சர்களும் வாழ்த்து சொல்லியிருக்கவேண்டும். அதுதானே முறை. அது அங்கே மீறப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்குத்தான் அந்த வழிமுறை உள்ளது என நான் வாதிட்டேன். அதற்குபிறகு வேறுவழியில்லாமல் என்னை அனுமதித்தார்கள். நானும் வாழ்த்திவிட்டு வந்தேன். தமிழகத்தில் நடைபெறும் விவகாரங்கள் குறித்து அறிக்கை கொடுத்தேன். அதில் நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், ஆளுநரை நேரில் சந்தித்து பேசலாம் என இருக்கிறோம் என்றார்.

சசிகலா கணவர் நடராஜனுக்காக உறுப்புதானம் செய்யப்பட்டதில் முறைகேடு இருப்பதாக தகவல்கள் வெளிவருவது குறித்த கேள்விக்கு, உறுப்புதானம் செய்தவரின் குடும்பத்தினரே அதைக் கொச்சைப் படுத்தவேண்டாம் என தெரிவித்துள்ள நிலையில், அதைப் பற்றி பேசுவது முறையாக இருக்காது. இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்