தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்குத் தனி ஒதுக்கீடு உள்ளது. இதேபோல் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பலர் உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தலைமைச் செயலாளர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (07/11/2020) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கினால் என்ன? 2015 - 2020 வரை ராணுவ வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை அதிகரிக்கப்பட்டுள்ளன? முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்திருந்தனர்? எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்று கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 20- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.