கடந்த 8 மாத காலமாக கல்வி உதவித் தொகை வழங்காததைக் கண்டித்து, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று (23.07.2021) காலை பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்தகால அதிமுக ஆட்சியில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ. 21,600 வழங்காமல் வெறும் 3,000 மட்டுமே வழங்கப்பட்டது.
இதையும் கடந்த 8 மாத காலமாக வழங்காமல் உள்ளனர். இதனால் பயிற்சி மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணிக்குச் செல்லாததால் நோயாளிகளுக்கான மருத்துவப் பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களை அழைத்துப் பேசி சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டுமென நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.