'தனி நபர்கள் எலி பேஸ்ட்டை வாங்க கடைகளுக்கு வந்தால் விற்கக் கூடாது' என மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தியின் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சென்னை மேயர், மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''வீட்டுக்கு வெளியில் போடக்கூடிய கோலங்களில் கூட அரிசி மாவினால் கோலம் போடப்பட்டது. கோலம் போடுவது என்பது அழகு படுத்துவது என்பதையும் கடந்து எறும்பு போன்ற நுண்ணுயிர்கள் அரிசி கோலத்தில் இருக்கின்ற அரிசி துகள்களை சாப்பிடுவதற்காகவே அந்த கோலம் போடுவது என்பது அந்த காலங்களில் நடைமுறை பழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் அதுவும் கூட இன்றெல்லாம் மாறி, எல்லாம் செயற்கையாக உள்ளது. இந்த செயற்கை எல்லாம் பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் சாணம் என்பதற்கு பதிலாக சாணி பவுடர் என்பதை வாங்கி வீட்டில் வைத்திருப்பது என்பது எல்லா வீடுகளிலும் பழக்கமாகிவிட்ட சூழல் உள்ளது. இந்த சாணி பவுடர் இன்றைக்கு உயிரை போக்குகிற ஒரு மிகப்பெரிய விஷத்தன்மை வாய்ந்தது என்பதாலே இளம் பெண்கள் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பொழுது தங்களுடைய உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதுவோர்கள் உடனடியாக எடுத்து உண்ணுகிற ஒரு நிலை ஏற்படுகிறது. அதனால் தான் அதிக அளவில் இளம் பெண்களின் மரணம் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதேபோல்தான் இந்த எலி பேஸ்ட். எலிகளை கொள்வதற்குரிய பாசனம் என்பது தேவையா தேவையில்லையா என்றால் விவசாய பெருமக்களுக்கு அது தேவை என்று கருதப்படுகிறது. ஆனாலும் கூட அது மனிதர்களின் உயிர் கொல்லியாக இருக்கும் பட்சத்தில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பொதுவாகவே தற்கொலைக்கு முயற்சி செய்பவராக இருந்தாலும் நேராக மருந்துக் கடைக்கு தனியாக சென்றுதான் எலி பேஸ்ட்டை கேட்பார்கள். நண்பர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு போய் மருந்து கடையில் இன்றைக்கு நான் எலி பேஸ்ட் வாங்கி நாளை காலை எட்டு மணிக்கு சாப்பிட போகிறேன் என்று யாரையும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அதனால் தான் தமிழக அரசின் சார்பில் மிக விரைவில் எலி பேஸ்ட்டை மருந்துக் கடைகளில் தனியாக வாங்குபவர்களுக்கு தரக்கூடாது என்கின்ற உத்தரவை கடைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும். கடைக்காரர்கள் அதனை சரியாக செய்கிறார்களா என்பதை நம்முடைய துறையின் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறோம்'' என்றார்.