வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக உமா மகேஸ்வரி என்பவர் பணியிலிருந்து வந்தார். இவர் அந்த வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் கொடுத்ததாக கணக்குக் காட்டி ரூ. 97 இலட்சம் மோசடி செய்திருக்கிறார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உமா மகேஸ்வரி கடந்த 2018 முதல் 2019ஆம் ஆண்டு வரை குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றினார். இவர், முறைகேடாக மகளிர் குழுக்களுக்குக் கடன் வழங்கியதாக போலியாக பத்திரம் தயார் செய்து அதன் மூலம் 97 இலட்சத்தி 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக கூட்டுறவுச் சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்சோதி, வேலூர் வணிக குற்றப் புலனாய்வில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வேலூர் வணிக குற்றப் புலனாய் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உமா மகேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. அதன் அடிப்படையில், வேலூர் வணிக குற்றப் புலனாய் பிரிவு காவல்துறையினர் உமா மகேஸ்வரியைக் கைது செய்தனர்.