தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று (01.03.2021) தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட குழுவினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், அதைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன. அதன்படி முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமகவிற்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியது. சிபிஎம் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், திமுக தருவதாக கூறிய தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.