லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் மரணம் கொலையே என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பழனிச்சாமியின் இரண்டாவது பிரேத பரிசோதனை குழுவில் இருந்த மருத்துவர் சம்பத்குமார் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். கழுத்து நெறிக்கப்பட்டு அல்லது தண்ணீரில் அழுத்தப்பட்டு பிராணவாயுவுக்கு சிரமப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல். பழனிசாமியின் பிரேத பரிசோதனையில் இன்னும் இரண்டு அரசு மருத்துவர்கள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். அதன் பின்னரே விசாரணை தொடங்கவிருக்கிறது.
பழனிச்சாமி
கோவை மாவட்டம் உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில், மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணியாற்றி வந்தார். மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, பழனிசாமியிடமும் விசாரணை நடந்தது. சோதனையும் விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், காரமடை, வெள்ளியங்காடு அருகேயுள்ள குளத்தில், பழனிசாமி பிணமாகக் கிடந்தார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பழனிச்சாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காரமடை போலீசில் பழனிசாமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும், ‘’மார்ட்டின் நிறுவன வளாகத்திற்குள், என் தந்தையை சித்ரவதை செய்து, கொலை செய்துள்ளனர். உடலை, தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் வீசியுள்ளனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும். பிரேத பரிசோதனையின் போது, நாங்கள் தேர்வு செய்யும் டாக்டர் இருக்க வேண்டும்’’என்று உயர் நீதிமன்றத்தில் பழனிசாமியின் மகன் ரோகிண் குமார் மனு தாக்கல் செய்தார்.
மார்ட்டின்
மனுவை விசாரித்த, நீதிபதிகள், இது குறித்து விசாரணை நடத்த, மாஜிஸ்திரேட் ஒருவரை நியமிக்கும்படி, கோவை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்படுகிறது. விசாரணையின் போது, மனுதாரர் அல்லது அவரது வழக்கறிஞர், மாஜிஸ்திரேட்டிடம் முறையிடலாம். மறுபிரேத பரிசோதனை குறித்தும், மாஜிஸ்திரேட் முடிவு எடுக்கலாம். அவ்வாறு முடிவெடுத்தால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அடிப்படையில், டாக்டர்கள் குழுவை நியமிக்கலாம். மனுதாரர் தரப்பில் தெரிவிக்கும், டாக்டரையும், குழுவில் சேர்க்க வேண்டும். அந்த டாக்டர், அரசு டாக்டராக இருக்க வேண்டும். இறந்தவரின் உடலை பார்க்க, அவரது குடும்பத்தினரை, போலீசார் அனுமதிக்க வேண்டும். விசாரணைக்கு பின், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம், சீலிட்ட உறையில் அறிக்கை அளிக்க வேண்டும். அதை, புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு கடிதம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு கிடைத்தது. அதன்பேரில் மார்ட்டின் நிறுவன அதிகாரி பழனிச்சாமியின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த கோவை 8-ம் எண் மாஜிஸ்திரேட்டு ராமதாஸை நியமித்து நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் பழனிச்சாமியின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பழனிச்சாமியின் உடல் மே 22ம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனையின் முடிவுகள் வந்த பின்னர் பழனிச்சாமியின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பழனிச்சாமி மரணம் கொலைதான் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.