விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள மீனவர்கள் குறைந்தது 50 நபர்கள் அடங்கிய குழுக்களாகச் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட சுருக்கு மடி வலைகள் தயார் செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித்தொழிலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தற்போது மீனவர்கள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்கக் கூடாது என்று மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மரக்காணம் அருகில் உள்ள கூனிமேடு மீனவர் கிராமத்தில் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி கடலுக்குச் சென்று மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது அங்கு ஆய்வு செய்யச் சென்ற விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் மற்றும் அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி ஏன் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறியதோடு அவர்களிடமிருந்த மீன்கள் மற்றும் சுருக்குமடி வகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் கோபமுற்ற மீனவ கிராம மக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார் மீனவர் சங்கத்தினர் என அனைவரும் ஒன்று திரண்டு மோட்டார் படகுக்குப் பயன்படுத்தும் டீசல் கேனில் இருந்த டீசலை தங்கள் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்ளப் போவதாகக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பறிமுதல் செய்த மீன் மற்றும் வலைகளை அதிகாரிகள் அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்த மீனவர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.