Skip to main content

‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’- தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Maperum 7 Tamilkanavu Tamil Nadu budget tabled today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 13 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்து வருகின்றனர்.

Maperum 7 Tamilkanavu Tamil Nadu budget tabled today

இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்ய இருக்கிறார். புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். நாளை வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கை விவாதம் இன்றி நிறைவேற்றப்படுகிறது. பொது நிதிநிலை அறிக்கையின் மீது விவாதம் 21 ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நிதி அமைச்சரின் பதிலுரையுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது. 

முன்னதாக தமிழ்நாடு பட்ஜெட் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இடம் பெறப்போகும் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், ‘சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்