கற்பனையான சினிமாவை விட நிஜத்தில் நடப்பது ரொம்ப பயங்கரமாக இருக்கும் என்பதற்கு மணப்பாறை ஆழ்குழாயில் விழுந்த குழந்தையை மீட்கும் போராட்டத்தை சொல்லாலம். உலக முழுவதும் ஆழ்குழாயில் விழுந்த குழந்தையை மீட்க முடியாமல் தோற்று போனதை வைத்து எடுத்த அறம் திரைப்படம் போன்றே நிஜத்தில் நடத்திருப்பது தமிழக மக்களை அதிகமாகவே பதட்டமடைய வைத்திருக்கிறது. தமிழக முழுவதும் அந்த குழந்தைக்கு என்னாச்சு.. என்கிற விசாரிப்புகள் அதிகாரித்து கொண்டே இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் ஆள்துளை கிணறு ஒன்று பயன்பாட்டுக்கு வழி இன்றி மேலே மூடப்பட்டு இருந்தது. கட்டிட தொழிலாளியான ஆரோக்கியதாஸ் மற்றும் தாயார் மேரி தம்பதியின், 2 வயது ஆண் குழந்தையான சுஜித் வின்சென்ட் விளையாடிக்கொண்டே ஆழ்துளை கிணற்றுக்குள் சுஜித் இன்று மாலை 5.40 மணியளவில் திடீரென விழுந்துவிட்டார்.
இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 22 அடி ஆழம் கொண்டதாக அந்த ஆள்துளை கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. உள்ளே ஆக்சிஜனை ட்யூப் மூலம் அனுப்பி அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை தீயணைப்புத்துறையினர் எடுத்தனர். சம்பவ இடத்திற்கு மருத்துவ மீட்பு குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றின், பக்கவாட்டில் ஜேசிபி மூலமாக குழியைத் தோண்டி அதன் வழியாகவும் குழந்தை எடுப்பதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனால், அதிர்வு காரணமாக, ஆழ்துளை கிணறுக்குள் மணல் விழுந்ததால், உடனடியாக அந்த பணி நிறுத்தப்பட்டது.
குழந்தை பயப்படாமல் இருப்பதற்காக கிணற்றுக்குள், வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராவை அனுப்பி தீயணைப்புத்துறையினர் சோதித்துப் பார்த்தபோது, உட்கார்ந்த நிலையில் குழந்தை இருப்பது தெரியவந்தது. குழந்தையின் உடலில் அசைவு இருக்கிறது. குழந்தையின் தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் தாயார் மேரி ஆகியோரை வைத்து குழந்தையிடம் ஒலிபெருக்கியில் பேச வைத்தனர் அதிகாரிகள். இருள் சூழத் தொடங்கியதால், கூடுதல் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரடியாகச் சென்று மீட்பு குழுவினருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். மாவட்ட போலீஸ் எஸ்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோரும் அடுத்தடுத்து அங்கே விரைந்து சென்று, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.
இதனிடையே மதுரையில் இருந்து, ரோபோ அறிவியலாளர் மணிகண்டன், நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மீட்பு நிபுணர் டேனியல் ஆகியோரும், ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்று, தாங்கள் வைத்துள்ள கருவிகள் மூலமாக, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதால், குழந்தை பேச சிரமப்படுகிறது. ஆனால், குழந்தையிடம் அசைவு தென்படுவதால் அஞ்ச வேண்டாம் என மருத்துவ குழு தெரிவித்து வருகிறது. விழுந்த இடத்திலிருந்து தற்போது மேலும் கூடுதலாக 6 அடி ஆழம் வரை குழந்தை கீழே சென்றுள்ளதால்தான் மீட்பு பணியில் சிறு தடை ஏற்பட்டது.
மணிகண்டன் குழு ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பிய கருவி மூலம், சுஜித்தின் ஒரு கையில் கயிறு மாட்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இன்னொரு கையிலும் இதேபோல கயிறு மாட்டிவிட்டால், சிறுவனை மெல்ல மெல்ல மேலே தூக்கி கொண்டு வர முடியும். உடனடியாக முதலுதவி அளிக்க, மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்திலும் தொலைதூர கிராமங்களில் குழந்தைகள் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து சிக்கி கொள்வதும், தீயணைப்பு மீட்பு குழுவின் பலமணி நேர போரட்டத்திற்கு பின்பு குழந்தைகளை சடலமாகவே மீட்கப்படுவதும் அனைவரையும் வேதனைக்குள்ளாகும் நிகழ்வு. இதற்கு காரணம் மீட்பு குழுவினரிடம் அதற்கான கருவிகள் ஏதும் இல்லாதது தான்.
அறிவியல் இத்தனை வளர்ச்சியடைந்தும் இந்த குழந்தையை மீட்பதில் அரசாங்கத்தின் பக்கம் சரியான கருவி இல்லை என்பதும் அதற்கான சரியான அங்கீகாரம் இல்லாமல் இருப்பதும் பெரிய கவலையை உண்டாக்கி உள்ளது. சுஜித் மீட்புக்கு பிறகாவது ஏதாவது… அரசாங்கம் ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிபார்ப்பு.