திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (45). லால்குடி அருகே ராஜீவ்காந்திக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் அரியூர் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன்(51) மற்றும் இவரது மகன்கள் பிரசாத், சக்திவேல் ஆகிய மூவரும் வேலை செய்து வருகின்றனர்.
ராஜீவ்காந்தியிடம் நாகேந்திரன் பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில நாட்களாகச் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்லவில்லை. இதனால், நாகேந்திரனிடம் ஏன் வேலைக்கு வரவில்லை என ராஜீவ்காந்தி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பாக மாறியது. இதனால், ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி நாகேந்திரனைத் தாக்கியுள்ளார். இதைத் தட்டிக் கேட்ட அவரது மகன் பிரசாந்த்தையும் ராஜீவ்காந்தி தாக்கியுள்ளார்.
இதனால், அவமானமடைந்த நாகேந்திரன் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார். இதுதொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேந்திரன் தற்கொலைக்குக் காரணமான ராஜீவ்காந்தியை வலைவீசித் தேடி வருகின்றனர்.