
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஞானோதயம் சோதனைச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று (20.06.2021) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வழியாக ஈச்சர் மினி லாரி ஒன்று மிகவேகமாக வந்தது.
அதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், அதை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திவரப்பட்டதைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 32 வயது சதீஷ் என்பதும், இவர் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு இந்த குட்கா பொருட்களைக் கடத்திவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஏற்றிவந்த லாரி, குட்கா பொருட்கள் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 4 லட்ச ரூபாய் மதிப்புடையது என்று போலீசார் கூறியுள்ளனர். கடத்தல் நடைபெற்றதைத் தடுத்து, பொருட்களைப் பறிமுதல் செய்த செஞ்சி டி.எஸ்.பி. இளங்கோவன் போலீசாருக்குப் பாராட்டு தெரிவித்தார்.