கும்பகோணத்தில் மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அதில் ஏறிய இளைஞர் ஒருவர் பேருந்தை வழியில் நிறுத்த சொல்லி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தத்தால் பேருந்தின் ஸ்டியரிங்கை வளைத்து சாவியைப் பறித்துக்கொண்டார். அதன்பின் நண்பர்களை வரவைத்த அந்த இளைஞர் பயணிகள் மத்தியில் அரிவாளை எடுத்து பேருந்தின் நடத்துநரைத் தாக்க முற்பட்டார். இதனால் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த காட்சிகள் அந்த மினி பேருந்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பேருந்திலிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹரி என்ற நபரை கும்பகோணம் மாதா கோவில் அருகே கைது செய்ததோடு தாக்குதலுக்குப் பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.