கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற சிறுவன் ஒருவன், அதே பள்ளியின் வாகனம் மோதி உயிரிழந்தார். இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், தான் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு அந்தத் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மாணவன் இறந்ததைப் பெரிய செய்தியாக வெளியிடுவேன். அதை வெளியிட வேண்டாம் என்றால் தனக்குக் குறிப்பிட்ட தொகை பணம் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார்.
அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் கச்சிராயபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலையிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் ஏழுமலையன் அந்த நபரிடம் போனில் விசாரணை செய்துள்ளார். அப்போது அந்தப் போலி நிருபர் ‘எனக்கு அரசியல் செல்வாக்கு, அதிகாரிகள் செல்வாக்கு உள்ளது. நான் இப்போதே உங்களை வேறு ஊருக்கு பணியிட மாற்றம் செய்வேன்’ என மிரட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், போனில் பேசியது சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. தற்போது அவர் மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த விவகாரம் விழுப்புரம் சரக டி.ஜ.ஜி. ஜியாவுல் ஹக் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக உரிய விசாரணை செய்து போலி நிருபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போலி நிருபர் சீனிவாசன் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.