குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோவில், வீடுகள், நிறுவனங்களில் திருட்டு மற்றும் சாலைகளில் நடந்து செல்வோர்களிடம் நகை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையொட்டி தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
அருமனை செம்மங்காலை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா தனது பெட்டிக்கடையில் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் கணவன் மனைவி போல் வந்த இருவர், பழம் வாங்குவது போல் நடித்து கிறிஸ்டினா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். அதே போல் தக்கலை பஸ் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை மோட்டார் பைக்கில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் பறித்துச் சென்றனர். மேலும் மார்த்தாண்டத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை மோட்டார் பைக்கில் வந்த ஜோடி பறித்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மோட்டார் பைக் ஜோடி பற்றிய செய்திகள் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பனச்சமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த ஜோடி ஒன்று போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் மோட்டார் பைக் ஜோடி இதுவாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரித்தபோது இவர்கள்தான் என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கூறும்போது, கேரளா மாநிலம் பள்ளிச்சல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்க்கு (34) திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் திருவனந்தபுரத்தில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். அந்த ஓட்டலின் எதிரே துணிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த வெள்ளறட பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி (40). அவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.
ஒரே இடத்தில் சதீசும் சாந்தகுமாரியும் வேலைப் பார்த்து வந்ததால் இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனிடையே ஆடம்பர செலவுக்காக இருவரும் திருட்டு, நகைப் பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். மேலும் குமரி மாவட்டத்தில் நடந்த 3 வழிப்பறி சம்பவங்கள் போன்று கேரளாவிலும் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.