திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசனிடம் பத்து ரூபாய் இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சதீஷ்குமார் புகார் மனுவை கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 100 சதவீதம் மனித சக்தியை கொண்டு கட்டிடங்கள் கட்டுதல், ஏரி- குளம் தூர்வாருதல், பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. கிராமப்புறங்களில் நடக்கும் இந்த பணியை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதுடன் கிராம மக்கள் சமூக தணிக்கை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வாதங்கள் செய்து ஒப்புதல் வழங்கப்படும்.
காடு வளர்ப்பு திட்டத்தில் 10 மரங்களை நட்டுவிட்டு 1000 மரங்கள் நட்டதாகவும் மேற்படி மரங்கள் யாவும், வறட்சியினாலும், கால்நடைகளாலும் அழிந்து விட்டதாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். இது மாதிரி முறைகேடு நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் ரூ.198 கோடிக்கு மேல் ஊழல் இத்திட்டத்தில் நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.