மஹாராஷ்டிராவில் புதிய அரசு அங்கு வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே. மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்றவுடன் பொதுமக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.
பதவியேற்பு விழாவில் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், அஜித்பவார், சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் "மஹாராஷ்டிராவில் புதிய அரசு அங்கு வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புகிறேன். மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைக்காபேசுவதில் உத்தவ் தாக்கரே, நம் அனைவருடன் இணைவார் என்று நம்புகிறேன்.
மஹாராஷ்டிர முதல்வராகியுள்ள உத்தவ் தாக்கரே பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்குவதில் சரத்பவாரின் நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்மாதிரியாக செயல்படும். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி மஹாராஷ்டிராவுக்கு முழுமையான வளர்ச்சி வழங்கும்" என குறிப்பிட்டுள்ளார்.