போடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டுயானை பயிர்களை சேதப்படுத்தியது விவசாயிகள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம், கோம்பை, பண்ணப்புரம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டுயானை ஒன்றின் நடமாட்டம் உள்ளதாக விவசாயிகள் அடிக்கடி புகார்கள் தெரிவித்து வந்தனர். இந்த யானை அடிக்கடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இந்த ஒற்றை யானையை விரட்ட முடியாமல் விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
இந்த யானையால் தாக்கப்பட்டு பலவிவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு சிறை வட்டம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு தோட்டத்துக்குள் இந்த மக்னா யானை புகுந்து அங்கிருந்த கரும்பு பயிர்களை முற்றிலும் அழித்து சேதப்படுத்தியது. அதைக்கண்டு கரும்புத் தோட்ட விசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புத் தோட்டங்கள் சேதமடைந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் விசாரணை நடத்தினார்கள். மக்னா யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் இதனை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து அந்த மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.