முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கர்நாடகா மாநிலத்தை தலைமையகமாகக் கொண்ட ராபிடோ பைக் டாக்ஸி என்ற தனியார் நிறுவனம், மதுரையில் வாடகை கார்கள் இயக்குவது போல், பைக் டாக்சிகளை இயக்கி வந்துள்ளனர். முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, மதுரை மாநகரில் அனுமதி பெறாமல் பைக் டாக்சிகளை இயக்கி வருகிறது. இது தொடர்பாக சுமார் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின்படி, சட்டப்படி அங்கீகாரம் பெறாத ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்திடம் மொபைல் ஆப் வழியாக தொடர்பு கொண்டு வாடகைக்கு இருசக்கர வாகனங்கள் இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராபிடோ பைக் டாக்ஸி வாகனத்தை பறிமுதல் செய்ய முடிவு எடுத்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை வாடகை பைக் டாக்ஸிக்கு பயன்படுத்தக் கூடாது" என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.