மதுரை மாவட்டம், மேலூரில் சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இன்று (06/03/2022) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், "சிறுமி தனது காதலர் நாகூர் ஹனீபாவுடன் காதலர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியேறி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது காதலர் நாகூர் ஹனீபா சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்துசென்று ஒரு வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என காதலர் நாகூர் ஹனீபா விசாரணையில் தெரிவித்தார்.
காவல்துறையினர் தேடுவதை அறிந்து நாகூர் ஹனீபா மற்றும் அவரது காதலியான சிறுமி ஆகிய இருவரும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். எலி மருந்து சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டில் நாகூர் ஹனீபாவின் தாயார் விட்டு சென்றுள்ளார். மதுரை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் சிறுமி கூட்டுப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவில்லை எனவும், உடலில் எந்தவித காயமும் இல்லை என்பதும், கையில் குளுகோஸ் ஏற்றியதற்கான அடையாளமே உள்ளது எனவும், மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சிறுமி கடத்தல் வழக்கில் நாகூர் ஹனீபா உட்பட அவரது தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் ஆகிய 8 பேர் மீது போக்ஸோ, கடத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது. இந்த விவகாரத்தில் போக்ஸோ வழக்குப் பதிவாகியுள்ளதால், சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது. சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டுள்ளது எனவும், சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை குறித்து பெற்றோரிடம் விளக்கத்தை அளித்துள்ளோம்". இவ்வாறு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.