Skip to main content

வானத்தில் பறந்தபடியே விமானத்தில் திருமணம்! - கரோனா ரணகளத்திலும் மதுரையில் குதூகலம்!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

Madurai couple got married on Airplane

 

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவில்களிலோ மண்டபங்களிலோ திருமணம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூமியில்தானே தடை! வானத்தில் நடத்தினால் சட்டத்தால் தடுத்துவிட முடியாதுதானே?

 

நேற்று (23.05.2021) மதுரையில் பிரபல மரக்கடை அதிபர் ஒருவர், தனது மகளுக்கும் டாக்டர் மணமகனுக்கும் வானத்தில் பறந்தபடியே, புரோகிதர்கள் மந்திரம் ஓத, விமானத்தில் திருமணம் நடத்திவைத்துள்ளார். இதற்கென்றே பெங்களூருவில் இருந்து தனி விமானம் மதுரை விமான நிலையத்துக்கு வந்து, மணமக்களையும் சொந்தபந்தங்களையும் அழைத்துச் சென்று, திருமணம் நடந்தபிறகு இறக்கிவிட்டுள்ளது.

 

‘பெரிய செலவெல்லாம் இல்லை. ரூ. 50 லட்சத்திலேயே நல்லபடியாக திருமணத்தை நடத்திவிட்டனர்’ எனச் சொல்லும் நட்பின் அடிப்படையிலான அந்த ‘சோர்ஸ்’, மதுரை விமான நிலையத்தினுள் திருமண வீட்டார் நுழையும் வீடியோ க்ளிப்பிங் ஒன்றை நமக்கு அனுப்பிவைத்தது.

 

“கரோனா ரணகளத்திலும் குதூகலமா? எனக் கேள்வி எழுப்புவதெல்லாம் வேண்டாத வேலை. ஆனாலும், கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் வகையில் சில ஆம்புலன்ஸுகளை அந்தச் செல்வந்தர் வாங்கித் தந்திருந்தால், உலகமே அந்தத் தம்பதியினரை வாழ்த்தியிருக்குமே?” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்த நண்பர்.

 

‘பறந்து பறந்து பணம் தேடி’ எனச் சொல்வார்கள். அப்படி சேர்த்த பணத்தைச் செலவு செய்து, வானத்தில் பறந்தபடியே திருமணம் நடத்திவைத்து, மகளை சந்தோஷ சிறகடித்துப் பறக்கவைத்த தந்தையின் பாசம், ‘வானத்தைப் போல’ பரந்து விரிந்ததே!

 

 

சார்ந்த செய்திகள்