பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் சாதனை விளக்கக் கூட்டங்களையும், கொண்டாட்டங்களையும் நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர் பாஜகவினர். அந்தவகையில் தமிழகத்திலும் இதற்கான கூட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளை கோவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ''டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் செய்து வருகிறார்கள். மக்களுக்கு இடையூறு செய்வது போன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் காவல்துறை ஏவல்துறையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 21 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை. தலையிடப்போவதும் இல்லை. பாஜக தனிமனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்தாது. எப்போதும் சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்துவோம். கட்சியின் தொண்டர்களை முன்னிலைப்படுத்துவோம்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல, முப்படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றும் 'அக்னி வீரர்' திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் அக்னி வீரர் திட்டத்தில் தேர்வானவர்களுக்கு காவல்துறை பணியில் இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதைப் போல தமிழகத்திலும் இட ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்" என்றார்.