மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் (வயது 77) ஆகஸ்ட் 9ஆம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரது உயிர் நேற்று (13/08/2021) பிரிந்தது.
இவரது மறைவுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரை ஆதீனம் மறைவிற்கு முதல்வர் அறிவித்ததன் பேரில் மதுரை ஆதீன மடத்திற்கு வந்து அவருக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளோம். தனிப்பட்ட முறையில் 290 ஆவது ஆதீனத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் நல்ல உறவு உள்ளது. 292 ஆவது ஆதீனம் என்னிடம் மிகுந்து பாசம் கொண்டவர் என்பதால் இவரின் மறைவு தனிபட்ட விதத்தில் பெரும் இழப்பு தான்.
நாளை சுதந்திர தின விழாவில் கலைஞர் பெற்றுத்தந்த சுயமரியாதையின் அடிப்படையில் முதல் முறையாக கோட்டையில் முதல்வர் கொடியேற்ற விழாவில் பங்கேற்க உள்ளோம். பண்பாட்டு, கலாச்சார அடையாளமாகவும் முழுமரியாதையும், ஊக்குவிக்கும் கட்சியாக தி.மு.க இருந்து வருகிறது; தொடர்ந்து இருக்கும்” என்று தெரிவித்தார்.