Skip to main content

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா மறைவுக்கு எம்.எச் ஜவாஹிருல்லா இரங்கல் 

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  

 

மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு. செயலாளரும், ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  அஸ்லம்  பாஷா அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் நம்மை விட்டுப் பிரிந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அஸ்லம் பாஷா அவர்களது மரணம் மனிதநேய மரணம் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் எனது உடன் பிறவா சகோதரனை எனது மாணவராக வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் எனது வகுப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து இனிமையாக பழகிய ஒரு நண்பரை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து பணியாற்றி பிறகு மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பான முறையில் சேவை செய்த ஆற்றல்மிக்க தொண்டரை நான் இன்று இழந்து பரிதவிக்கிறேன். ஆம்பூர் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்குவதற்கான முன்முயற்சியைச் செய்ததுடன் பிரிக்கப்படாத வேலூர் மாவட்டத்தில் தமுமுகவும் பிறகு ம.ம.க. வும் வளர்வதற்கு பெரிதும் பாடுபட்டவர் அஸ்லம் பாஷா.

 

M. H. Jawahirullah statement


2011 முதல் 2016 வரை 14வது சட்டமன்றத்தில் புதிதாக  தோற்றுவிக்கப்பட்ட ஆம்பூர் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டு என்னுடன் இணைந்து சிறப்பான நேர்மையான மக்கள் பிரதிநிதியாக அஸ்லம் பாஷா  செயல்பட்டார். அவரது முன்முயற்சியால் ரூ 2 கோடி அளவில் மல்லிகைபேடு முதல் தூத்திபேட்டு வரை தரை பாலம், பதிவாளர் அலுவலகம், ரெட்டி தோப்பு பகுதிக்குத் தனி மேம்பாலம், போக்குவரத்து வட்டார அலுவலகம் உள்பட பல வளர்ச்சி பணிகள் ஆம்பூர் தொகுதியில் நடைபெற்றன.

 

M. H. Jawahirullah statement


14வது சட்டமன்றத்தில் இடம் பெற்ற இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் கொண்ட நான்கு கட்சிகளில் மூன்று கட்சிகளில்  பிளவுகள் ஏற்பட்டன. ஆனால் ஆசை வார்த்தைகள் எதற்கும் அடிபணியாமல் கட்சி கட்டுப்பாட்டை முழுமையாக கடைப்பிடித்து கொள்கை குன்றாக தனது இறுதி மூச்சு வரை மனிதநேய மக்கள் கட்சியில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் அஸ்லம் பாஷா சட்டமன்றத்தில் தமிழக மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆழமாக  சிந்தித்து சீரிய கருத்துகளை முன்வைத்து அரசின் கவனத்தை திரும்பியவர் அஸ்லம் பாஷா. அரசு அலுவலர்களிடம் நயம்பட பேசி மக்களின் பல உரிமைகளை வென்று காட்டியவர் அவர்.

மக்களுக்கு இன்னும் ஏராளமாக சேவை செய்யும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட அஸ்லம் பாஷா 52வது வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்து ஆறாத்துயரில் நம்மை ஆழ்த்திவிட்டது நிச்சயமாக தமிழகத்திற்கு இது பேரிழப்பாகும். அன்பு சகோதரர் அஸ்லம் பாஷா அவர்களுக்கு வல்ல இறைவன் மறுமையின் நற்பேறுகளை வழங்குவதற்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அழகிய பொறுமையை வழங்குவதற்கும் கிருபை செய்வானாக" எனக்கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்