"தமிழும், தமிழர்களும் மனித குலம் உருவானதிலிருந்தே மூத்த குடிமக்களாக விளங்குகறார்கள். குறிப்பாக தமிழகத்தில் பண்பாடும், கலாச்சாரமும் உலகையே வியக்க வைக்கிறது" என தமிழ் சமூகத்தை பரந்த மனதுடன் பாராட்டுகிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலை கழக பேராசிரியை,
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொங்குநாடு பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைைம தாங்கினார்.
கருத்தரங்கில் கனடாவில் உள்ள டோராண்டோ பல்கலைக்கழக பேராசிரியை பிரேந்தா ஈ.எப்.பெக் என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழின் பெருமிதத்தைப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
“ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தை அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இதற்கு எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் ஒரு காரையே வீடுபோல மாற்றி எனக்கு தந்தனர். அதில் பலஇடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தேன். அப்படித்தான் தமிழகத்திற்கும் வந்தேன். நான் எத்தனையோ நாடுகளுக்கு சுற்றியுள்ளேன் ஆனால் தமிழ்நாடு மனிதகுலத்திற்கே மூத்ததாக விளங்குவதை கண்டு வியந்து போனேன்.
ஒருமுறை கன்னியாகுமரிக்கு வந்தேன். அப்போது இந்திய நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் எனக்கு வந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இப்போது கொங்குநாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வீரம், வரலாற்று கதைகள் குறித்து ஆராய்ச்சி செய்தேன் எல்லாமே கடந்து விட்ட வரலாறுகளைப் பேசுகிறது. ஆனால் இது எக்காலத்திலும் அழியாது.
வெளிநாட்டிலிருந்து வந்த நான் உங்கள் பெருமிதத்தை இங்கு உணர்கிறேன். நீங்கள் எல்லோரும் தமிழ் மொழியின் சிறப்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பல வகையான உபசரிப்புகள், வீரம், காதல் இருக்கிறது. இங்கு எல்லாவற்றிற்கும் அன்பே மூலதனமாக உள்ளது"என்றார்.
இதில் பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நம் மொழியின் பெருமையை இனத்தின் சிறப்பை வெளிநாட்டவர்கள் எடுத்து கூறுவது போல் சிறப்பு வேறு என்னவாக இருக்க முடியும்.