தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 சட்டமன்றத் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொன்னேரி (தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், குளச்சல், விளவங்கோடு, மேலூர், சிவகாசி, ஓமலூர், உதகை, காரைக்குடி, ஊத்தங்கரை (தனி), அறந்தாங்கி, விருத்தாச்சலம், உடுமலைப்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி), ஈரோடு (கிழக்கு), திருவாடானை, கோவை (தெற்கு), கிள்ளியூர், நாங்குநேரி, மயிலாடுதுறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. நேற்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது. கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுத்திருப்பதாக அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் கரூர் எம்.பி. ஜோதிமணி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன், பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை' எனக் கூறியுள்ளார்.