சின்னம் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் மேல்முறையீடு
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, தேர்தல் கமிஷன் முடிவெடுக்க, 2018 பிப்.,வரை கால நீட்டிப்பு வழங்க உத்தரவிடக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர்.
கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. அத்துடன், இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை திட்டமிட்டபடி அக்டோபர் 6-ம் தேதி தொடங்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
எனவே, கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்தது. அதில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் நேற்று (அக்.,4) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்று, தினகரன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கோரிக்கை குறித்து தேர்தல் கமிஷனை அணுகலாம். இந்த விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது எனக் கூறினர்.
இதை தொடர்ந்து டிடிவி தினகரன் தரப்பு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டு உள்ளது. இன்று கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.